இந்தியா

போலி தலைமை நீதிபதி உத்தரவு மூலம் டிஜிட்டல் கைது மோசடி - தாமாக முன்வந்து விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

Published On 2025-10-17 13:30 IST   |   Update On 2025-10-17 13:30:00 IST
  • கடந்த ஆண்டை விட 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை இருமடங்காகி 4,439 வழக்குகள் பதிவாகி உள்ளன.
  • 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பிறப்பித்தது போல போலியாகத் தயாரிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி அரியானா மாநிலம் அம்பாலாவை சேர்ந்த 73 வயது பெண்மணி ஒருவரை 'டிஜிட்டல் கைது செய்வதாக ஏமாற்றி சைபர் மோசடி கும்பல் ஒன்று ரூ.1 பணம் பறிக்க முயற்சித்துள்ளது.

இதுதொடர்பாக அப்பெண்மணி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு புகார் கடிதம் ஒன்றை எழுதினார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே மோசடிக்காரர்கள் போலி செய்திருப்பது நீதிபதிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

"போலி ஆவணங்கள் மூலம் டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்" என்ற தலைப்பில் தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஸி அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.

இந்த மோசடிகளைச் சமாளிக்க மாநில காவல்துறையால் முடியுமா அல்லது நாடு தழுவிய விசாரணைக்கு மத்திய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது குறித்து இந்த அமர்வு முடிவு செய்யும்.

தேசிய சைபர் குற்றப் புகாரளிக்கும் இணையதளத்தில் (NCRP), 2024 இல் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 2,746 'டிஜிட்டல் கைது' வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட இருமடங்காகி 4,439 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, 'டிஜிட்டல் கைது' மூலம் பொதுமக்களிடமிருந்து சுமார் ரூ. 2,500 கோடி வரை பணம் பறிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News