தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால் அதிருப்தி... பாஜகவில் இருந்து வெளியேறும் முன்னாள் துணை முதல்வர்
- மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
- லக்ஷ்மன் சவடி மூன்று முறை அடானி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
பெலகாவி:
கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பாஜக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில், மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் உள்ள முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சவடி, பாஜகவில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.
லக்ஷ்மன் சவடி மூன்று முறை பெலகாவி மாவட்டம் அடானி தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். 2018ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குமட்டல்லியிடம் தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற குமத்தல்லி பாஜகவில் இணைந்தார். அவருக்கு மீண்டும் அடானி தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியிருக்கிறது.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள சவடி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளார். அவர் காங்கிரசில் இணையலாம் என பேசப்படுகிறது.
2019இல் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை வீழ்த்தி, பாஜக ஆட்சியமைக்க உதவிய அதிருப்தி எம்எல்ஏக்களில் குமட்டல்லியும் ஒருவர்.