குதிரை வண்டியில் திருமண ஊர்வலம் சென்ற தலித் மணமகன்.. இழுத்து தரையில் தள்ளி தாக்குதல் நடத்திய கும்பல்
- இதற்கு மறுநாள் அந்த கும்பல் மீண்டும் வந்து மணமகளின் வீட்டை கட்டைகளால் தாக்கி, குடும்ப உறுப்பினர்களை அடித்து துன்புறுத்தினர்.
- குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் தலித் திருமண ஊர்வலத்தில் ஆதிக்க சாதியினர் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, மதுராவின் நௌஜ்ஹீல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூரேகா கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான கல்பனா, அலிகரில் உள்ள நாக்லா பதம் கிராமத்தில் வசிக்கும் ஆகாஷ் ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது.
அன்று நள்ளிரவு 12:30 மணியளவில், திருமண ஊர்வலம் DJ பாடல் இசையுடன் நடந்துகொண்டிருந்தபோது, அண்டை கிராமத்திலிருந்து ஜாட் சமூகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உட்பட சுமார் 20-25 பேர் அங்கு வந்தனர். அவர்கள் DJ இசையை நிறுத்த சொல்லி மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் திருமண வீட்டார் அதற்கு மறுக்கவே அந்த நபர்கள் சாதிய ரீதியாக தூஷணம் செய்து வன்முறைத் தாக்குதலைத் தொடங்கினர்.
ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களை தடிகளாலும் இரும்பு கம்பிகளாலும் அந் கும்பல் தாக்கியது. மணமகனை குதிரை வண்டியிலிருந்து அவரது காலரைப் பிடித்து கீழே இழுத்து தரையில் தள்ளி தாக்குதல் நடத்தினர். மேலும் மீண்டும் வண்டியில் ஏறி திருமண ஊர்வலத்தை நடத்தினால் சுட்டுவிடுவோம் என்று மிரட்டினர்.
தகவலறிந்து போலீசார் வந்தபோது, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. திருமணச் சடங்குகள் காவல்துறையினரின் முன்னிலையில் நிறைவடைந்தன. இரவு முழுவதும் எட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு மறுநாள் அந்த கும்பல் மீண்டும் வந்து மணமகளின் வீட்டை கட்டைகளால் தாக்கி, குடும்ப உறுப்பினர்களை அடித்து, வீட்டுப் பொருட்களையும் சேதப்படுத்தினர். பெண்களும் அநாகரீகமாக நடத்தப்பட்டனர். காயமடைந்த குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலித் பாதுகாப்பு 'பீம் ஆர்மி' ஊழியர்கள் வந்ததும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுதொடர்பான புகாரின் பேரில் ஜாட் சமூக இளைஞர்கள் மூவர் உட்பட 20-25 அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. புகார் பெறப்பட்டுள்ளதாகவும், வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் துணைப்பிரிவு காவல் அதிகாரி குஞ்சன் சிங் தெரிவித்தார்.