இந்தியா

சிலிண்டர் விலை உயர்வு: பாஜக தோழர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும் - டி.கே.சிவகுமார்

Published On 2025-04-08 12:02 IST   |   Update On 2025-04-08 12:07:00 IST
  • என் பாஜக நண்பர்களுக்கு நமஸ்காரம், உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்
  • யாத்திரையில் இறங்கியவர்களுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன.

வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.

ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.803 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

முன்னதாக கர்நாடக பாஜக நேற்று 16 நாள் 'ஜனக்ரோஷ யாத்ரே' என்ற மாநில அளவிலான ஜனக்ரோஷ யாத்திரை பிரச்சாரம் ஒன்றை தொடங்கியது. கர்நாடகாவில் விலைவாசி உயர்வு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி இந்த பிரசார யாத்திரையை கர்நாடக பாஜக தொடங்கியது.

இதையும், மத்திய அரசு கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் தொடர்புபடுத்தி டி.கே.சிவகுமார் விமர்சனம் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட காணொளியில் கூறியதாவது, "என் பாஜக தோழர்களுக்கு நமஸ்காரம், நீங்கள் அனைவரும் ஜனக்ரோஷ யாத்திரை செய்கிறீர்கள், உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். ஆனால் அதே நேரத்தில் இந்திய அரசு, உங்கள் பாஜக அரசு, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்தியுள்ளது.

இப்போது மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களின் எதிர்வினையை நான் அறிய விரும்புகிறேன். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் போதிலும், மத்திய அரசு ஏன் பெட்ரோலியப் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது என்பதை பாஜக தலைவர்கள் மாநில மக்களுக்கு விளக்க வேண்டும்.

 ஜனக்ரோஷ யாத்திரையில் இறங்கியவர்களுக்கு இப்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று மத்திய பாஜக அரசு உயர்த்தியுள்ள விலைகளைக் குறைக்க பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், அல்லது அவர்கள் யாத்திரையை முடித்துவிட்டு, பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்.

இதை விட்டுவிட்டு, இந்த யாத்திரையின் கேலிக்கூத்தை அவர்கள் தொடர்ந்தால், அவர்கள் நிச்சயமாக பொதுமக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News