இந்தியா

புயல் மழையில் குடையுடன் மந்திரி ரோஜா நடனமாடிய காட்சி.

மக்கள் பாதிக்கப்படும் நேரத்தில் புயல் மழையில் நடனமாடிய மந்திரி ரோஜா... வீடியோவால் சர்ச்சை

Published On 2023-12-07 04:49 GMT   |   Update On 2023-12-07 04:49 GMT
  • மிச்சாங் புயல் ஆந்திர மாநிலத்தில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.
  • ரோஜா மழையை ரசித்து நடனம் ஆடுகிறார் என சாடியிருக்கிறது.

திருப்பதி:

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஆந்திர மாநிலத்தில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.

10 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புயல் காரணமாக ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நடிகையும், ஆந்திராவின் சுற்றுலாத்துறை மந்திரியான ரோஜாவும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

புத்தூர் பேரூராட்சி பிள்ளாரிப்பட்டு அலுவலகம் தா்மாம்பா புரத்தில் கனமழை பெய்தது. அப்போது ரோஜா குடையை வைத்தபடி மழையில் நடனமாடியபடி ரசித்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

புயல் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் மந்திரி ஒருவர் மழையில் நனைந்தபடி நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுபற்றி தெலுங்கு தேசம் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது புயல் போன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் அமைச்சர்கள் அனைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தோம்.

ஆனால் ரோஜா மழையை ரசித்து நடனம் ஆடுகிறார் என சாடியிருக்கிறது. இதையடுத்து ரோஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News