இந்தியா

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 581 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்

Published On 2023-05-05 09:32 IST   |   Update On 2023-05-05 09:32:00 IST
  • கர்நாடக சட்டசபைக்கு 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
  • 122 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள் ஆவர்.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றிருந்தது. வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்திருந்தார்கள். அதில் தங்களது சொத்து விவரங்கள், தங்கள் மீது இருக்கும் கிரிமினல் வழக்குகள் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

அதன்படி, கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் 2,613 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் 29 பேர் மட்டும் வேட்பு மனுக்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, 2,586 வேட்பாளர்கள் மீது இருக்கும் கிரிமினல் வழக்குகள் பற்றி டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ஏ.டி.ஆர்) ஆய்வு செய்து, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் கிரிமினல் வழக்குகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 2,613 பேரில் 581 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 2,560 பேரில், 391 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தது. அதாவது தற்போது 22 சதவீதம் வேட்பாளர்கள் மீதும், கடந்த 2018-ம் ஆண்டு 15 சதவீத வேட்பாளர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இவற்றில் 404 வேட்பாளர்கள் மீது பயங்கர கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதாவது கொலை, கொலை முயற்சி, கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகள் ஆகும். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் இதுபோன்று 254 வேட்பாளர்கள் மீது பயங்கர கிரிமினல் வழக்குகள் இருந்திருந்தது. அதுபோல், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், சுயேச்சைகள் மீது இருக்கும் வழக்குகள் பற்றிய தகவல்களையும் அந்த அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 223 வேட்பாளர்களில், 122 பேர் மீதும், பா.ஜனதா கட்சியில் 224 வேட்பாளர்களில் 96 பேர் மீதும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 208 வேட்பாளர்களில் 70 பேர் மீதும், ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 208 வேட்பாளர்களில் 48 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. மேலும் காங்கிரசில் 69 பேர் மீதும், பா.ஜனதாவில் 66 பேர் மீதும், ஜனதாதளம் (எஸ்) கட்சியில் 52 பேர் மீதும் பயங்கர கிரிமினல் வழக்குகள் உள்ளன.

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் மீது மட்டும் கற்பழிப்பு வழக்கு உள்ளது. 49 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபட்ட வழக்குகளும், 8 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகளும், 35 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் இருப்பதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News