ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ்-ஆட்டோ மோதல்: பள்ளி மாணவி உள்பட 3 பேர் பலி
- டிரைவர் அக்ஷய், பள்ளி மாணவி ஸ்ருதி லட்சுமி, ஜோதி லட்சுமி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் தாழமேல் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய்(வயது23). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் கவரலூர் பள்ளிவடக்கம் பகுதியை சேர்ந்த சுனில் பினி-நீலம்மாள் தம்பதியின் மகளான 10-ம் வகுப்பு மாணவி ஸ்ருதி லட்சுமி(16) மற்றும் ஜோதிலட்சுமி(21) ஆகிய இருவரும் பயணம் செய்தனர்.
அவர்கள் அஞ்சல் பகுதியில் இருந்து கரவலூருக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களது ஆட்டோ மாவிலா கோவில் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக எதிரே ஐயப்ப பக்தர்கள் குழுவை அழைத்து வந்த சுற்றுலா பஸ் வந்தது.
அந்த பஸ்சும், ஆட்டோவும் திடீரென நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த டிரைவர் அக்ஷய், பள்ளி மாணவி ஸ்ருதி லட்சுமி, ஜோதி லட்சுமி ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
ஆட்டோ டிரைவர் அக்ஷய் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த பள்ளி மாணவி மற்றும் இளம்பெண்ணை மீட்டு அஞ்சல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் பரிதாபமாக இறந்துவிட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆனது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் பள்ளி மாணவி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அஞ்சல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.