இந்தியா

நீதிமன்றம் என்பது ஒழுக்கம், நெறிமுறைகள் குறித்து போதனை செய்யும் நிறுவனம் அல்ல: சுப்ரீம் கோர்ட்

Published On 2023-05-27 12:10 GMT   |   Update On 2023-05-27 12:10 GMT
  • ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பெண்ணை முன்கூட்டியே விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவு.
  • நீதிமன்றம் முடிவுகளை எடுக்கும்போது சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதிகள் கூறினர்.

புதுடெல்லி:

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

கள்ளக்காதலனின் டார்ச்சர் காரணமாக குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்ய அந்த பெண் முடிவெடுத்திருக்கிறார். அதன்படி குழந்தைகளுக்கு முதலில் விஷம் கொடுத்துள்ளார். பின்னர் விஷத்தை தான் குடிப்பதற்காக ஒரு டம்ளரில் ஊற்றியபோது, அவது மருமகள் தட்டிவிட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக இரண்டு குழந்தைகளும் உயிரிழக்க, தாய் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆயுள் தண்டனை வழங்கியது. அதன்படி தண்டனை அனுபவித்து வந்தார்.

ஏறக்குறைய 20 ஆண்டுகள் சிறையில் இருந்ததாக கூறி, முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு அந்தப் பெண் மனு கொடுத்தார். ஆனால், அவர் செய்த குற்றத்தின் கொடூரமான தன்மையைக் கருத்தில் கொண்டு, மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரையை தமிழக அரசு நிராகரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தை அந்த பெண் நாடினார்.

இவ்வழக்கின் விசாரணை முடிந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, இரண்டு குழந்தைகளைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பெண்ணை முன்கூட்டியே விடுதலை செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் நீதிமன்றம் என்பது, ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகள் குறித்து சமூகத்திற்கு போதனை செய்யும் நிறுவனம் அல்ல என்றும், முடிவுகளை எடுக்கும்போது அது சட்டத்தின் ஆட்சிக்கு கட்டுப்பட்டது என்றும் கூறினர்.

'பெண்ணை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து, மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரையை அரசு ஏற்காததற்கு சரியான அல்லது நியாயமான காரணம் இல்லை. அந்த பெண் செய்த குற்றத்தை நாங்கள் மறக்கவில்லை. ஆனால் மேல்முறையீடு செய்த அந்த பெண் விதியின் கொடூரமான தாக்கத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் நாங்கள் மறந்துவிடவில்லை.

எனவே, அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரின் கையொப்பமிட்டு, உள்துறையால் (சிறைச்சாலை-IV) வெளியிடப்பட்ட அரசாணையின்படி, மேல்முறையீடு செய்தவர் முன்கூட்டிய விடுதலையின் பயனைப் பெறுகிறார். அதன்படி, மேல்முறையீட்டாளர் வேறு எந்த வழக்கிலும் தேவைப்படாவிட்டால், உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்' என நீதிபதிகள் கூறினர்.

Tags:    

Similar News