இந்தியா
null

இடஒதுக்கீடு பெறுவதற்காக 'மதம்' மாறுவது அரசியலமைப்பு மீதான மோசடி - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published On 2024-11-27 12:40 IST   |   Update On 2024-11-27 12:44:00 IST
  • அவருக்கு சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்தது.
  • ஞானஸ்நானத்திற்குப் பிறகு அவர் தன்னை ஒரு இந்து என்று அடையாளம் காண முடியாது.

உண்மையான நம்பிக்கை இல்லாமல் இட ஒதுக்கீடு பெரும் ஒற்றை நோக்கத்தோடு மட்டுமே மதம் மாறுவது அரசியலமைப்பை மோசடி செய்வதாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அரசு பணி இட ஒதுக்கீட்டைப் பெற தன்னை இந்து எனக்கூறி பட்டியலின வகுப்பு [SC] சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். புதுச்சேரியில் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக அவர் இந்த சான்றிதழைக் கோரியுள்ளார். ஆனால் அவருக்குச் சான்றிதழ் மறுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. ஆனால் அவருக்கு சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்தது. எனவே அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த மேல்முறையீடு மனுவானது நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், மனுதாரர் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார் என்பதற்கும் தேவாலயத்திற்குத் தவறாமல் செல்வதன் மூலம் மத விசுவாசத்தை தீவிரமாக கடைப்பிடிப்பதையும் முன்வைக்கப்பட்ட சான்றுகள் தெளிவாக நிரூபிக்கின்றன.

 

ஆனால் தன்னை இந்துவாக முன்னிறுத்தி வேலைவாய்ப்புக்காகப் பட்டியலின சாதி சான்றிதழ் கேட்கிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. ஞானஸ்நானத்திற்குப் பிறகு அவர் தன்னை ஒரு இந்து என்று அடையாளப்படுத்த முடியாது.

கிறிஸ்தவராக இருந்து இட ஒதுக்கீடு பெறும் நோக்கத்திற்காக மட்டுமே இந்து மதத்தைத் தழுவுவதாகக் கூறுபவருக்குப் பட்டியலின சான்றிதழ் வழங்குவது இட ஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது மட்டுமின்றி அரசியலமைப்பையே மோசடி செய்வதாகும் என்று கூறி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர்.

Tags:    

Similar News