இந்தியா கூட்டணியில் சர்ச்சை மேலும் அதிகரிப்பு: பிரிந்து செல்ல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யோசனை
- எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி உடைந்து சிதறும் என்று கருதுகிறார்கள்.
- இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தபோது பா.ஜ.க.வை தோற்கடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, சமாஜ்வாடி, கம்யூனிஸ்டுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.
இந்த கூட்டணியில் தொடக்கத்தில் இருந்தே கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில் மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படவில்லை என்ற அதிருப்தி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
மராட்டியத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் செய்தபோது கையில் ஒரு சிறிய சட்டப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, 'மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அழிக்க திட்ட மிடுகிறார்' என்று பிரசாரம் செய்தார்.
மேலும் அதானிக்கும் மோடிக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும், அதானிக்கு நாட்டை மோடி தாரைவார்த்து விட்டதாகவும் பிரசாரம் செய்தார். என்றாலும் மராட்டிய தேர்தலில் காங்கிரசுக்கு படு தோல்வியே மிஞ்சியது.
என்றாலும் ராகுல் காந்தி சட்டப் புத்தகத்தையும், அதானி மீது குற்றம் சுமத்துவதையும் கைவிடவில்லை. கடந்த 25-ந்தேதி முதல் பாராளுமன்றம் கூடிய நாளில் இருந்து தினமும் அவர் பாராளுமன்றத்தில் அதானி பிரச்சனையை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்கிறார்.
அதோடு பாராளுமன்றத்துக்கு வெளியே வந்து தினமும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்துகிறார். இதனால் முக்கிய பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேச இயலவில்லை என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் ராகுல் மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் மழை சேதத்திற்கு கூடுதல் நிதி கேட்டு திட்டமிட்டு இருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மேற்கு வங்காள பிரச்சனையை எழுப்ப ஆர்வமாக இருந்தனர்.
சமாஜ்வாடி எம்.பி.க்கள் சம்பல் கலவரத்தை பாராளுமன்றத்தில் எழுப்ப திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் ராகுல் தொடர்ந்து அதானி பிரச்சனையை மட்டும் பேசியதால் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் செயல்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்கத் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்ட ணிக்கு தலைமையேற்று வழி நடத்த தயார் என்று அறிவித்துள்ளார். இது இந்தியா கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.
மம்தா பானர்ஜிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
அதுபோல இந்தியா கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் நேரடியாகவே ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியை வழி நடத்தும் தலைவராக ராகுலை ஏற்க இயலாது என்று கூறி உள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணி, இந்தியா கூட்டணி என இரண்டிலும் இடம் பெறாத ஆந்திர மாநில கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மம்தா திறமையானவர். அவரால் நிச்சயமாக எதிர்க்கட்சிகள் அணியை திறம்பட வழிநடத்த முடியும்" என்று கூறியுள்ளது.
இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்ப நிலை காரணமாக அந்த கூட்டணிக்கு தலைமை ஏற்பது யார் என்பதில் சர்ச்சை மேலும் விரிவடைந்துள்ளது. ராகுலின் தனிச்சசையான முடிவு காரணமாக இந்தியா கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக சரத்பவார், லல்லுபிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கருதுகிறார்கள்.
இது இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள சர்ச்சையை தொடர்ந்து அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த விஷயத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்த நிலையில் விரைவில் டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் ஆம்ஆத்மி கட்சி அதற்கு தயாராகி வருகிறது. வேட்பாளர்களையும் அந்த கட்சி அறிவித்து விட்டது. டெல்லி தேர்தலில் காங்கி ரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஆம்ஆத்மி கூறியுள்ளது.
இதன் மூலம் இந்தியா கூட்டணியின் நோக்கம் சிதைந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எந்த நேரத்திலும் இந்தியா கூட்டணி மிகப்பெரிய உடைந்து சிதறும் என்று கருதுகிறார்கள்.
ஆனால் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை விட்டுக் கொடுப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் தயங்குகிறார்கள். தலைமை பதவியை விட்டுக் கொடுத்தால் சாதாரண கட்சி போன்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்று ராகுலும், கார்கேவும் கருதுவதாக தெரிய வருகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி தனித்து களம் இறங்குவதுதான் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று கூறி வருகிறார்கள்.
மாநில சட்டசபை தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சி அடைவதாக அவர்கள் கருதுகிறார்கள்.
குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ள மாநிலங்களில் வெறும் 30 அல்லது 40 இடங்களில் மட்டும் போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் நிர்வாகிகள் மனம் தளர்ந்து போகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு எம்.எல்.ஏ. ஆக முடியாத நிலை நீடிக்கிறது.
எனவேதான் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளில் பலரும் கட்சியை விட்டு விலகிச் செல்கிறார்கள். இதை தடுத்து காங்கிரசை வலுப்படுத்த வேண்டுமானால் இந்தியா கூட்டணியில் இடம் பெறாமல் தனித்து போட்டியிடுவதுதான் நல்லது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக இந்தியா கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி வருகிறது.