ஆள்மாறாட்டத்தில் காதலி என நினைத்து வீட்டு வேலைக்காரியை கொன்ற வாலிபர்
- இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண் கொடுத்த முகவரியை கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்றார்.
- அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அரிகிருஷ்ணாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணா. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோணசீமா மாவட்டம் அமலாபுரத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுடன் அரிகிருஷ்ணாவுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நீண்ட நேரம் பேசி பழகி அரட்டை அடித்து வந்தனர். 2 பேரும் தங்களது செல்போன் எண் மற்றும் முகவரியை பகிர்ந்து கொண்டனர். சில நாட்களுக்கு பிறகு அரிகிருஷ்ணா இளம்பெண்ணை காதலிப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் தனக்கு திருமணமாகி கணவர் இருப்பதாகவும், நண்பர்களாக மட்டும் பழகலாம் என தெரிவித்தார். ஆனால் அரிகிருஷ்ணா உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என செல்போனில் அடிக்கடி வற்புறுத்தி வந்தார்.
இதனால் விரத்தி அடைந்த இளம்பெண் இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறி அரிகிருஷ்ணாவின் செல்போன் எண்ணை பிளாக் லிஸ்டில் போட்டு டெலிட் செய்துவிட்டார்.
இளம் பெண்ணுடன் பேச முடியாததால் ஆத்திரம் அடைந்த அரிகிருஷ்ணா நெல்லூரில் இருந்து அமலாபுரத்திற்கு வந்தார். பஸ் நிலையத்தில் இருந்த பாருக்கு சென்று மது குடித்தார்.
போதை தலைக்கேறிய நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண் கொடுத்த முகவரியை கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததால் மாடிக்கு சென்றார். அங்கு வீட்டில் வேலை செய்யும் ஸ்ரீதேவி என்ற பெண் நின்று கொண்டு இருந்தார்.
தன்னுடைய காதலிதான் நிற்பதாக நினைத்த ஹரிகிருஷ்ணா தான் கொண்டு சென்ற கத்தியால் அந்த பெண்ணின் கழுத்து முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீதேவி கூச்சலிட்டபடி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். ஸ்ரீதேவியின் அலறல் சத்தம் கேட்ட இளம் பெண்ணின் தாய் மாடிக்கு ஓடி வந்தார். அவரையும் அரிகிருஷ்ணா பயங்கரமாக வெட்டினார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அரிகிருஷ்ணாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த இளம் பெண்ணின் தாயாரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதேவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அரிகிருஷ்ணாவிடம் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டத்தில் கொலை நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.