இந்தியா

"இந்திய பிரிவினைக்கு காரணமான குற்றவாளி காங்கிரஸ்.." சொல்கிறது NCERT புதிய பாடத்திட்டம்!

Published On 2025-08-16 21:26 IST   |   Update On 2025-08-16 21:26:00 IST
  • பிரிவினை தவிர்க்க முடியாதது அல்ல என்றும், அது தவறான முடிவுகளால் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
  • முஸ்லிம் அல்லாதவர்களுடன் சமத்துவத்தை மறுக்கும் முஸ்லிம் தலைவர்களின் 'முஸ்லிம் அரசியல்' உணர்வே பிரிவினைக்கு காரணம்

மத்திய அரசு என்சிஇஆர்டி (NCERT) புதிய பாடத்திட்டத்தில் இந்திய பிரிவினை பற்றிய தகவல்களில் மாற்றங்களை செய்துள்ளது. 6-8 வகுப்பு மற்றும் 9-12 வகுப்பு பாடப்புத்தகங்களில் இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 அன்று அனுசரிக்கப்படும் 'பிரிவினை பயங்கரங்களின் நினைவு நாள்' (Partition Horrors Remembrance Day) குறித்த குறிப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  

6 முதல் 8 ஆம் வகுப்பு புதிய பாடதிட்டத்தில், 'பிரிவினைக்குக் காரணமான குற்றவாளிகள்' என்ற தலைப்பில், இந்தியப் பிரிவினைக்கு மூன்று பேர் பொறுப்பு எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதன்படி, பிரிவினையைக் கோரிய முகமது அலி ஜின்னா, அதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைமை, அதை நடைமுறைப்படுத்திய மவுண்ட்பேட்டன் பிரபு ஆகியோர் குற்றவாளிகள் என கூறப்பட்டுள்ளது.

பிரிவினை தவிர்க்க முடியாதது அல்ல என்றும், அது தவறான முடிவுகளால் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் டொமினியன் அந்தஸ்து வழங்குவதன் மூலம் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்க நினைத்ததாகவும், ஆனால் காங்கிரஸ் இந்த திட்டத்தை நிராகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு போருக்கு பயந்து நேரு மற்றும் பட்டேல் பிரிவினையை ஏற்றுக்கொண்டனர் என்றும், அதன் பிறகு மகாத்மா காந்தியும் தன் எதிர்ப்பைக் கைவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 முதல் 12 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம், முஸ்லிம் அல்லாதவர்களுடன் சமத்துவத்தை மறுக்கும் முஸ்லிம் தலைவர்களின் 'முஸ்லிம் அரசியல்' உணர்வே பிரிவினைக்கு காரணம் எனக் கூறுகிறது.

பிரிவினைக்குப் பிறகு காஷ்மீர் சிக்கல், பாகிஸ்தானுடனான போர்கள், பயங்கரவாதம் மற்றும் இந்தியாவின் பாதுகாப்புச் செலவுகள் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கிடையே என்சிஇஆர்டி புதிய பாடத்திட்டத்தில் வரலாற்றின் உண்மைகள் சிதைக்கப்பட்டுள்ளன என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News