இந்தியா

காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்லை: இந்தியா கூட்டணி குறித்த ப.சிதம்பரம் கருத்துக்கு பாஜக பதில்..!

Published On 2025-05-16 15:18 IST   |   Update On 2025-05-16 15:18:00 IST
  • இந்தியா கூட்டணி அப்படியே இருப்பதாக உறுதியாக தெரியவில்லை என்றார் ப.சிதம்பரம்.
  • எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் அப்படியே இருக்காது. பாஜக ஒரு வலிமையான அமைப்பு- பாஜக.

இந்தியா கூட்டணி இன்னும் அப்படியே உள்ளதா? என்பது உறுதியாக தெரியவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கூறிய நிலையில், காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்லை என பாஜக பதில் அளித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் யாதவ் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது "மிருதுஞ்சய் சிங் கூறியதுபோல் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை. இந்தியா கூட்டணி அப்படியே இருப்பதாக அவர் பார்க்கிறார். ஆனால், எனக்கு அப்படி உறுதியாக தெரியவில்லை. இதற்கு சல்மான் குர்ஷித் மட்டுமே பதில் அளிக்க முடியும். ஏனென்றால் இந்தியா கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பிடித்திருந்தார். கூட்டணி முற்றிலும் உறுதியாக இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தற்போது அப்படி உறுதியாக இருப்பதுபோல் தெரியவில்லை. இந்த கூட்டணியை இன்னும் ஒன்றாக இணைக்க முடியும் என நம்புகிறேன். அதற்கு இன்னும் நேரம் உள்ளது" என ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகள் அப்படியே இருக்காது. பாஜக ஒரு வலிமையான அமைப்பு. ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவருக்குக் கூட காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்லை என்பது தெரியும்.

இவ்வாறு பண்டாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News