இந்தியா

தலித் தலைவர் ராமர் கோவில் வருகை.. புனிதம் கெட்டுவிட்டதாக கங்கை நீர் தெளித்த பாஜக தலைவர் இடைநீக்கம்

Published On 2025-04-08 17:02 IST   |   Update On 2025-04-08 17:02:00 IST
  • கோயில் புனிதம் இழந்துவிட்டதாகவும், அதனால் தான் அங்கு கங்கை நீரைத் தெளித்து மீண்டும் பூஜை செய்வேன் என்றும் கூறினார்.
  • ஞான்தேவ் அஹுஜா, அந்த கோவிலில் கங்கை நீரை தெளிக்கும் வீடியோ வைரலானது.

ராஜஸ்தானில் தலித் தலைவர் வந்து சென்றபின் கங்கை நீரை தெளித்து கோவிலை சுத்தப்படுத்திய பாஜக மூத்த தலைவர் ஞான் தேவ் அஹுஜா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த வாரம் ராம நவமி தினத்தன்று, ஆல்வாரில் உள்ள ஒரு ராமர் கோவிலில் பிராண-பிரதிஷ்ட விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் காங்கிரசை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திகா ராம் ஜூலியும் பங்கேற்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞான்தேவ் அஹுஜா மறுநாள் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ராமர் இருப்பதை மறுப்பவர்களின் வருகையால் கோயில் புனிதம் இழந்துவிட்டதாகவும், அதனால் தான் அங்கு கங்கை நீரைத் தெளித்து மீண்டும் பூஜை செய்வேன் என்றும் கூறினார்.

இதற்குப் பிறகு, ஞான்தேவ் அஹுஜா, அந்த கோவிலில் கங்கை நீரை தெளிக்கும் வீடியோ வைரலானது. இதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

"இது எனது தனிப்பட்ட நம்பிக்கை மீதான தாக்குதல் மட்டுமல்ல, தீண்டாமை என்ற மனிதாபிமானமற்ற மனநிலையை ஊக்குவிக்கும் செயல். அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் நேரடி அவமதிப்பாகும்" என்று திகா ராம் ஜூலி தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தனது எக்ஸ் பக்கத்தில், '21 ஆம் நூற்றாண்டில் ஒரு நாகரிக சமூகத்தில் இத்தகைய குறுகிய மனப்பான்மை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த சிந்தனையுடன் உடன்படுகிறதா என்று பாஜக பதிலளிக்க வேண்டும்?" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சர்ச்சை வலுத்ததால் ஞான்தேவ் அஹுஜாவை பாஜக கட்சியில் இருந்து இன்று இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் ஞான்தேவ் அஹுஜா தனது செயலுக்கு மூன்று நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு விளக்கம் அளிக்கத் தவறினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Tags:    

Similar News