இந்தியா

கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: அமெரிக்க ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகல்

Published On 2024-12-11 12:33 IST   |   Update On 2024-12-11 12:33:00 IST
  • கொழும்பு துறைமுக முனைய அபிவிருத்தி திட்டம் சிறப்பாக முன்னேறி வருகிறது.
  • அமெரிக்க டாலர்களை கடனாக பெறும் முடிவை திரும்பப் பெற்றுள்ளோம்.

புதுடெல்லி:

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானி, சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான திட்டங்களை அரசு அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து பெற்றதாகவும், அந்தத் திட்டங்களுக்காக அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியதாகவும், அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

இதனால் அதானி நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தது. இவ்விவகாரத்தால் அதானி குழுமத்துடனான ஒப்பந்தங்களை கென்யா அரசு ரத்து செய்தது.

இதற்கிடையே இலங்கை கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை அதானி குழுமத்தின் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் நிறுவனம் பெற்றிருந்தது.

இத்திட்டம் அதானி நிறுவனம், இலங்கை துறைமுக ஆணையம், ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஆகியவவை இணைந்து செயல்படுத்துகின்றன.

இதற்காக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கழகத்துடன் 553 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.4692 கோடி) கடன் பெற ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்தது.

இதற்கிடையே அதானி மீதான குற்றச்சாட்டை அடுத்து அவரது நிறுவனத்துக்கு கடன் வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கழகம் தெரிவித்து இருந்தது.


இந்த நிலையில் அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கழகத்துடனான கடன் ஒப்பந்தத்தை திரும்ப பெறுவதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அதானி குழுமம் தரப்பில் கூறும் போது, அமெரிக்க நிறுவனமான, அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி கழகத்தில் இருந்து, 553 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக பெறும் முடிவை திரும்பப் பெற்றுள்ளோம்.

கொழும்பு துறைமுக திட்டத்திற்கு எங்கள் நிறுவனத்தின் உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மை திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படும். இலங்கையில் கொழும்பு துறைமுக முனைய அபிவிருத்தி திட்டம் சிறப்பாக முன்னேறி வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அத்திட்டம் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கழகம் கடந்த ஆண்டு நவம்பரில் கடனை வழங்க ஒப்புக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News