இந்தியா

சந்திரசேகர் ராவின் மகள் கவிதா

பா.ஜனதாவில் இணையுமாறு என்னை அணுகினார்கள்: சந்திரசேகர் ராவின் மகள் குற்றச்சாட்டு

Published On 2022-11-19 02:57 GMT   |   Update On 2022-11-19 02:57 GMT
  • பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக புகார்.
  • நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி.

ஐதராபாத் :

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு, கட்சியில் இருந்து விலக சமீபத்தில் பா.ஜனதா தரப்பில் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.

குறிப்பாக ஆளுங்கட்சியில் இருந்து விலகி அடுத்த தேர்தலில் பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக கூறி மர்ம நபர்கள் சிலர் அணுகியதாக சில எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறினர்.

இந்த விவகாரத்தில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்து உள்ளது.

இந்த நிலையில் சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவிடமே பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியினர் அணுகியதாக நேற்று அவர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

முன்னதாக இவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் போனில் பேசியதாக பா.ஜனதா எம்.பி. தர்மபுரி அரவிந்த் கூறியிருந்தார்.

இதை மறுக்கும் வகையில் கவிதா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி. நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன். நான் யார் பெயரையும் கூற விரும்பவில்லை. பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியின் நண்பர்கள் சிலர் மற்றும் நட்பு அமைப்புகள் என்னை அணுகின. 'ஷிண்டே மாடல்' என்ற பெயரில் இந்த வாய்ப்பை வழங்க முன்வந்தனர். ஆனால் பணிவாக மறுத்து விட்டேன். ஏனெனில் எனது தலைவர் சந்திரசேகர் ராவ் காருவின் கட்சியில் என் இதயம் உள்ளது' என்று தெரிவித்தார்.

எனவே தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துமாறு பா.ஜனதா எம்.பி.க்கு அறிவுறுத்திய கவிதா, தவறினால் செருப்பால் அடிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மராட்டியத்தில் சிவசேனா சார்பில் மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா-காங்கிரஸ் கூட்டணிக்கு வழங்கியிருந்த ஆதரவை திடீரென விலக்கிக்கொண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கைகோர்த்து தற்போது முதல்-மந்திரியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மகளின் இந்த குற்றச்சாட்டு தெலுங்கானா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீது அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, பா.ஜனதா எம்.பி. தர்மபுரி அரவிந்தின் வீட்டை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தொண்டர்கள் நேற்று சூறையாடினர்.

இது ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News