இந்தியா

(கோப்பு படம்)

ஏழைகளுக்கு இலவச உணவு அளிக்கும் திட்டத்திற்காக அரிசி, கோதுமை போதிய அளவு உள்ளது- மத்திய அரசு

Published On 2022-10-17 14:42 GMT   |   Update On 2022-10-17 14:42 GMT
  • அக்டோபர் 1ந் தேதி நிலவரப்படி, 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளது.
  • அக்டோபர் 16ந் தேதி வரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் உணவு தானியங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உணவு தானியங்கள் கையிருப்பு குறித்த ஆய்வின்படி அக்டோபர் 1-ந் தேதி நிலவரப்படி, 227 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 205 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் மத்திய அரசின் தொகுப்பில் கையிருப்பில் உள்ளதாக நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 113 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 237 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான கரீப் பருவ கொள்முதல் தொடங்கியுள்ளதால் அக்டோபர் 16-ஆம் தேதி வரை 58 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பருவமழை சிறப்பாக பெய்து வருவதால், இதே அளவிலான நெல் உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News