இந்தியா

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தியது மத்திய அரசு

Published On 2022-12-31 01:55 GMT   |   Update On 2022-12-31 01:55 GMT
  • ‘செல்வ மகள்’ சேமிப்பு திட்டத்துக்கான வட்டியில் மாற்றம் இல்லை.
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 8 சதவீதம் ஆகிறது.

புதுடெல்லி

சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் மாற்றி அமைத்து வருகிறது.

இந்தநிலையில், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மாற்றி அமைத்தது. அதன்படி, வட்டி விகிதம் 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 8 சதவீதம் ஆகிறது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கு, 123 மாதங்களில் முதிர்வடையும்வகையில் 7 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தது. அது, 120 மாதங்களில் முதிர்வடையும்வகையில், 7.2 சதவீத வட்டியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாதாந்திர வருவாய் திட்ட வட்டி, 0.4 சதவீதம் உயர்ந்து 7.1 சதவீதம் ஆகிறது. தேசிய சிறுசேமிப்பு சான்றிதழ் வட்டி விகிதம் 0.2 சதவீதம் உயர்ந்து 7 சதவீதம் ஆகிறது.

அஞ்சலகங்களில் ஓராண்டு டெபாசிட் திட்ட வட்டி 6.6 சதவீதமாகவும், 2 வருட டெபா சிட் வட்டி 6.8 சதவீதமாகவும், 3 ஆண்டு டெபாசிட் வட்டி 6.9 சதவீதமாகவும், 5 ஆண்டு டெபாசிட் வட்டி 7 சதவீதமாக வும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் வட்டி, 1.1 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வருமானவரி சலுகை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில், பெண் குழந்தைகளுக்கான 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அது, 7.6 சதவீதமாக நீடிக்கும். அதுபோல், பொது வருங்கால வைப்புநிதிக்கான வட்டியும் 7.1 சதவீதமாக நீடிக்கும்.

வங்கி சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக நீடிக்கும்.

தொடர்ந்து 2-வது காலாண்டாக சிறுசேமிப்பு வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து 5 தடவை உயர்த்தி உள்ளது. அதை பின்பற்றி டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தி உள்ளன.

அந்த வரிசையில், சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News