இந்தியா

ஆளுநர்களின் அதிகாரத்தில் தலையிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும் - உச்சநீதிமன்றத்தை எச்சரித்த மத்திய அரசு

Published On 2025-08-16 18:07 IST   |   Update On 2025-08-16 18:24:00 IST
  • கால அவகாசம் விதிப்பது அந்த பதவிகளின் கண்ணியத்தைக் குறைக்கும்.
  • நீதிமன்றங்கள் எங்கள் அதிகாரங்களில் தலையிடுவது சரியான அணுகுமுறை அல்ல.

சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு கால அவகாசம் விதிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் வருடக்கணக்கில் கிடப்பில் போட்டு இழுத்தடித்ததால் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் அதிகார மீறலை கண்டித்து மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.

மேலும் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் 3 மாத காலக்கெடுவை விதித்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விசாரணையில் உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு நீதிபதிகள் காலக்கெடு விதிக்க அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

"ஜனாதிபதி மற்றும் ஆளுநர் என்பது ஒரு ஜனநாயக அமைப்பில் உயர் பதவிகள். எனவே அவர்களுக்கு கால அவகாசம் விதிப்பது அந்த பதவிகளின் கண்ணியத்தைக் குறைக்கும்.

இந்த விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிட்டால், அது அரசியலமைப்பு பெருங்குழப்பத்திற்கு வழிவகுக்கும். நீதிமன்றங்கள் எங்கள் அதிகாரங்களில் தலையிடுவது சரியான அணுகுமுறை அல்ல.

அத்தகைய தலையீடு சில தேவையற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்" என்று மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில்  தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News