இந்தியா

ரூ. 63,000 கோடி மதிப்பில் 26 Rafael போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்..

Published On 2025-04-09 14:37 IST   |   Update On 2025-04-09 15:38:00 IST
  • 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
  • ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவலின்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.

இந்த மாத இறுதியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு இந்தியா வருகை தரவுள்ள நிலையில் அப்போது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.

ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன. அவை அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. 

Tags:    

Similar News