பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
- உள் விசாரணை ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
- குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனு.
டெல்லி மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் தீப்பிடிக்க, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர். அப்போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். கோடிக்கணக்கான பணம் தீயில் கருகியது.
அவரது வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா (தற்போது ஓய்வு பெற்றுள்ளார்), 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தார். இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மா இது தொடர்பாக அளித்த வாக்குமூலத்தையும் பதிவு செய்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அளித்தது.
இந்த இரண்டையும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நீதிபதி யஷ்வந்த் சர்மா மீது வழக்குப்பதிவு (FIR) செய்யக் கோரிய உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் மறுத்துவிட்டனர்.
தலைமை நீதிபதி அமைத்த குழு மூலமாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கைக்குதான் வழிவகுக்கும். குற்றவியல் விசாரணைக்கு மாற்றாக இருக்காது. குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தங்கள் மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.