ஜி7 உச்சிமாநாட்டில் புறக்கணிக்கப்பட்ட இந்தியா.. வெளியுறவு கொள்கை தோல்வி என காங்கிரஸ் விமர்சனம்
- கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் மோடி ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள முடியாதது இதுவே முதல் முறை.
- இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய அனுமதித்ததற்கு அடுத்தபடியாக இது மற்றொரு இராஜதந்திர தோல்வி
கனடா நடத்தும் இந்த வருட ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது வெளியுறவு கொள்கை தோல்வி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இந்த மாதம் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெறும். இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மேற்கு ஆசியாவின் பதட்டமான சூழ்நிலை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிற முக்கிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள்.
இருப்பினும், இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அழைப்பும் வரவில்லை.
கடைசி நேரத்தில் அவருக்கு அழைப்பு வந்தாலும், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தற்போதைய பதட்டமான உறவுகளின் பின்னணியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள விரும்பாமல் இருக்கலாம். இது நடந்தால், கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் மோடி ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள முடியாதது இதுவே முதல் முறை.
இதுகுறித்து விமர்சித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஒரு இராஜதந்திர பின்னடைவு. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய அனுமதித்ததற்கு அடுத்தபடியாக இது மற்றொரு வெளியுறவுக் கொள்கை தோல்வி என்று அவர் விமர்சித்தார்
இந்தியா ஜி7 இல் உறுப்பினராக இல்லாவிட்டாலும், இந்தியப் பிரதமர்கள் கடந்த காலங்களில் பல முறை இந்த உச்சிமாநாடுகளில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.