சென்னை-மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
- மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.
- அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
மும்பை:
சென்னையில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தில் குண்டு வெடிக்கும் என்று மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து தகவல் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து போலீசார் உஷார் படுத்தப் பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் 174 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் பதட்டமின்றி பத்திரமாக மீட்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்படி மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானத்தில் இண்டிகோ விமானம் அதிரடியாக வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
அப்போது விமானத்தின் கழிவறையில் 30 நிமிடத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கிலத்தில் டஸ்யூ பேப்பர் ஒன்றில் எழுதப்பட்ட எச்சரிக்கை குறிப்பு ஒன்று கிடந்தது. அதையும் பறி முதல் செய்துள்ள போலீசார் இதனை எழுதிப் போட்டது யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இண்டிகோ விமானத்துக்கு ஒரே வாரத் துக்குள் கிடைத்த 2-வது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும். கடந்த 28-ந் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானத்துக்கும் இதுபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.