இந்தியா

தென்இந்தியாவில் இந்த முறை பா.ஜனதா செயல்பாடு சிறப்பானதாக இருக்கும்: அமித் ஷா

Published On 2024-04-18 15:59 GMT   |   Update On 2024-04-18 15:59 GMT
  • கடந்த முறை கர்நாடகா மாநிலத்தில் 25 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
  • தெலுங்கானாவில் 4 இடங்களில் வென்றிருந்தது.

பா.ஜனதா கூட்டணி 400 இலக்கை நிர்ணயித்து மக்களவை தேர்தலை சந்தித்து வருகிறது. தனியாக 370 இலக்கை நிர்ணயித்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் நாளை நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் பா.ஜனதா 200 இடங்களை கூட தாண்டாது எனக் கூறி வருகின்றனர்.

தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி 15 இடங்களுக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த முறை தென்மாநிலங்களில் எங்களுடைய செயல்பாடு சிறப்பானதாக இருக்கும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமித் ஷா கூறியதாவது:-

கிழக்கு, மேற்கு, வடக்கு அல்லது தெற்கு என எங்கும் 400 இடங்களுக்கு மேல் நாங்கள் பெறுவோம் என்று நாட்டின் சூழல் தெரிவிக்கிறது. தெற்கில் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை செயல்பாடு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டில் நம்பிக்கையும், உற்சாகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது. விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் பிரதமர் மோடி நம்பிக்கை வைத்துள்ளனர். அவருக்கு ஆதரவு கொடுப்பது பற்றி ஆர்வமாக உள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பையும் வளத்தையும் உறுதிப்படுத்த மோடிக்கு பெரும்பான்மையான 400 இடங்களை வழங்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலின்போது பா.ஜனதா கர்நாடகா மாநிலத்தில் 25 இடங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, புதுச்சேரியில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

Tags:    

Similar News