இந்தியா

சித்தராமையா மீதான முடா மோசடி குற்றச்சாட்டு பாஜக சதியின் ஒரு பகுதி: சிவக்குமார்

Published On 2024-07-26 17:24 IST   |   Update On 2024-07-26 17:44:00 IST
  • காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய மாநிலமாக கர்நாடகா உள்ளது.
  • காங்கிரஸ் அரசுக்கு எதிரான சதியின் ஒரு பகுதிதான் முடா மோசடி குற்றச்சாட்டு.

மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் (MUDA) மனைகள் ஒதுக்கியது தொடர்பான மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்த வாரம் சித்தராமையா முதல் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மைசூரு நோக்கி பாஜக-வினர் பேரணி நடத்த உள்ளனர்.

இந்த நிலையில் முடா ஊழல் குற்றச்சாட்டு காங்கிரஸ் அரசுக்கு எதிரான பாஜக சதியின் ஒரு பகுதி என துணை முதல்வர் சிவக்குமார் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் வெற்றிபெறும் என பாஜக ஒருபோதும் நினைக்கவில்லை. ஆகவே, அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், முடிந்தவரை பேரணிகளை நடத்தட்டும். அவர்களுடைய பிரசாரத்திற்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் திட்டமிடுவோம்.

இவ்வாறு சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

முடா (MUDA) முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு வீட்டுமனை அமைப்பதற்காக 3.16 ஏக்கருக்கும் அதிகமாக 14 இடங்களை ஒதுக்கியதாக பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை குற்றம்சாட்டியுள்ளன.

எந்த தவறும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கும் சித்தராமையா, இந்த நிலங்கள் 2021-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் இருக்கும்போது ஒதுக்கப்பட்டது. என்னுடைய மனைவி ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீட்டுமனை ஒதுக்க ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என்றார்.

மேலும், முடா தனது மனைவியின் சொத்தை ஆக்கிரமித்துள்ளதாக முதல்வர் கூறி வந்தார். இதுகுறித்து முடா அதிகாரிகளின் கவனத்திற்கு அவர் கொண்டு சென்றபோது, அவர்கள் தங்கள் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதற்கு பதிலாக மாற்று இடங்களை ஒதுக்கீடு செய்தனர் என்றார்.

இது தொடர்பாக சிவக்குமார் கூறுகையில் "நிலத்தை இழந்த பலர் மாற்று இடங்களை பெற்றுள்ளனர். மற்றவர்கள் மாற்று தளங்களைப் பெற்ற விதத்தில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கம் அளிப்பார். நானும் தகவல் சேகரித்து வருகிறேன். இது தொடர்பாக முதல்வர் கேள்வி எழுப்பியபோது, அவருக்கு மாற்று நிலத்தை முடா வழங்கியது" என்றார்.

Tags:    

Similar News