கார்கே பேரணியில் காலியாக கிடந்த இருக்கைகள்: மாவட்ட தலைவரை சஸ்பெண்ட் செய்த காங்கிரஸ்
- ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் கூட்டம் பீகாரில் நடைபெற்றது.
- இதில் கார்கே, பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரை நினைவு கூறும் வகையில் மத்திய, மாநில, மாவடட் அளவில் ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் என்ற கோஷத்துடன் பேரணிகள், கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது.
அந்த வகையில் நேற்று பீகார் மாநிலம் புக்சார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்ட ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம் (Jai Bapu, Jai Bhim, Jai Samvidhan) கூட்டம் தல்சாகார் மைதானத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மல்லிகார்ஜூன உரையாற்றினார். அவரது உரையை கேட்க அதிக அளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அதிக அளவில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால் கார்கே, மாநிலத் தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட போதிலும் அதிக அளவில் கூட்டம் வரவில்லை. அதிக அளவிலான இருக்கைகள் காலியாக இருந்துள்ளது.
இதனால் புக்சார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோஜ் குமார் பாண்டே, ஒத்துழைப்பு குறைபாடு காரணமாக கட்சியின் அனைத்து விதமான பதவிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பேரணியில் பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அலாவாரு, மாநில காங்கிஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங், புக்சார் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. சுதாகர் சிங், சாசாராம் காங்கிரஸ் எம்.பி. மனோஜ் குமார் ராம் மற்றும் பல எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.