இந்தியா

சின்னசாமி மைதான கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு: ஆர்சிபி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு

Published On 2025-06-05 18:31 IST   |   Update On 2025-06-05 18:31:00 IST
  • சின்னசாமி மைதானம் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
  • 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஐபிஎல் 2025 சீசன் இறுதிப் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 18 வருடத்திற்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் வெற்றி கொண்டாட்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் உள்ள விதான சவுதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை வெற்றி பேரணிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் பேரணிக்கு தடைவிதிக்கப்பட்டது.

விதான சவுதாவில் ஆர்சிபி அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கலந்து கொண்டனர். பின்னர் சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கூட்ட நெரிசலுக்கு பாதுகாப்பு குறைபாடுதான் முக்கிய காரணம் என எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையே பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையுடன் கலந்தாலோசிக்கப் படவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஆர்சிபி ஏற்பாடு செய்திருந்தது என கர்நாடக அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் ஆர்சிபி அணிக்கெதிராக கப்பன் பார்க் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்சிபி, டிஎன்ஏ (நிகழ்ச்சி மேலாளர்), கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நிர்வாக கமிட்டி உள்ளிட்டவை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News