தோசை சுடும் ரோபோவை கண்டுபிடித்த பெங்களூரு என்ஜினீயர்
- ரோபோவுக்கு திண்டி என பெயர் வைத்துள்ளேன்.
- இது வணிக பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு:
உலக அளவில் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்களின் புகலிடமாக உள்ளது. இதனால் தொழில்நுட்ப பூங்கா என்று அழைக்கப்படும் பெங்களூருவில் ரோபோ பயன்பாடும் அதிகரித்து வருகிறது. ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இல்லத்தரசிகள் வீடுகளை கூட்டி பெருக்கவும், தண்ணீர் வைத்து கழுவி எடுக்கவும் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க இல்லத்தரசிகளின் சமையல் வேலையை எளிதாக்க இப்போது ரோபோ வந்துள்ளது. அதாவது தோசை சுடும் ரோபோவை பெங்களூருவை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
இதுபற்றி அந்த என்ஜினீயர் ரெடிட் என்ற இணையதள பக்கத்தில் தோசை சுடும் ரோபோவை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
நான் கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் தனிப்பட்ட முறையில் ஒரு ரோபோவை வடிவமைத்துள்ளேன். இந்த ரோபோ தானாகவே அடுப்பில் தோசை கல் வைத்தால் போதும் தானாகவே மாவை ஊற்றி தோசையை சுட்டெடுக்கும். எனது குடும்ப உறுப்பினர்கள் தோசை சுட சிரமப்படுவதை பார்த்து நான் இந்த தோசை சுடும் ரோபோவை வடிவமைத்தேன்.
இந்த ரோபோவுக்கு திண்டி என பெயர் வைத்துள்ளேன். (திண்டி என்றால் தமிழில் சிற்றுண்டி என்று பொருள்). இதுதொடர்பாக உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். இது வணிக பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதன் விலை பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை.
இந்த பதிவை பார்த்த பல இணையதள வாசிகள் அந்த என்ஜினீயரின் கண்டுபிடிப்புக்காக அவரை பாராட்டி வருகிறார்கள். ஒருவர், இந்த தோசை ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் ஸ்டேடியம் போல் தெரிகிறது என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், இந்த ரோபோவை உருவாக்க நீங்கள் நிறைய கடினமாக உழைத்திருக்க வேண்டும் என எனக்கு தெரிகிறது. இதைவிட இன்னும் சிறப்பான ரோபோவை உருவாக்க வேண்டும். அதற்கு எனது வாழ்த்துகள் என கூறியுள்ளார். இன்னொருவரின் பதிவில், இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் எடுத்த முயற்சியை நான் புரிந்துக்கொள்கிறேன் என்று கருத்து கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு தாய்மார்கள் தோசை சுட்டு ஊட்டும்போது இது அம்மா சுட்ட தோசை... இது அப்பா சுட்ட தோசை என கூறி தோசை ஊட்டுவது வழக்கம். இனிமேல் இது அம்மா... அப்பா... சுட்ட தோசை என கூற முடியாது. இது ரோபோ சுட்ட தோசை என கூறும் நிலை வந்துவிட்டது என்றால் மிகையல்ல.