இந்தியா

பிரகலாத் ஜோஷி, மல்லிகார்ஜூன கார்கே 

இப்போது இருப்பது இத்தாலி காங்கிரஸ்...அதன் தலைவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்- மத்திய மந்திரி கடும் விமர்சனம்

Published On 2022-12-20 17:11 IST   |   Update On 2022-12-20 17:11:00 IST
  • சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார்.
  • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மத்திய மந்திரிகள் பதிலடி

சுதந்திர போராட்டத்தில் பாஜகவினர் வீட்டில் உள்ள நாய் கூட நாட்டுக்காக இறந்ததா? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் பாஜகவினர் தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எல்லையில் அத்துமீறும் சீனாவை கண்டு கொள்ளாமல், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தாமல் அந்த கட்சி தப்பிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியிருந்தார். பாஜக அரசு சிங்கம் போல் பேசுகிறது, ஆனால் எலி போல் செயல்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய கார்கேவின் இந்த பேச்சு, பாராளுமன்றத்தில் அமளியை ஏற்டுத்தியது. இந்நிலையில் கார்கேவின் கருத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, தற்போதைய காங்கிரஸ் அசல் அல்ல, இது போலி தலைவர்கள் நிறைந்த இத்தாலி காங்கிரஸ் என்று விமர்சித்தார். அசல் காங்கிரசில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், சர்தார் படேல் போன்ற தலைவர்கள் விவகாரத்தில் தற்போதைய காங்கிரஸ் எப்படி நடந்து கொண்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸைக் கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதை அவர் நினைவு கூர்ந்தார். சுதந்திரப் போராட்டத்தின் பாரம்பரியம் குறித்து எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என்றும், தற்போதைய போலி காங்கிரசின் தலைவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்றும் அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும், அவரால் இவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியும் என்பதை யாரும் நம்ப முடியாது என்றும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.

நமது ராணுவ வீரர்களுக்கு எதிராக ராகுல்காந்தியும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறிய மற்றொரு மத்திய மந்திரி அஸ்வனி குமார் சௌபே, இதுபோன்ற அற்பமான கருத்துக்கள் காங்கிரஸ் பாத யாத்திரையை சவ யாத்திரையாக மாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News