ராம நவமி ஊர்வலத்தில் தாக்குதல் - பாஜக தலைவர்.. அப்படி ஒரு ஊர்வலமே நடக்கவில்லை - கொல்கத்தா போலீஸ்
- காவி கொடிகளை ஏந்தியதற்காக வாகனங்கள் மீது கற்கள் மழை பொழிந்தன.
- பொதுமக்கள் எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
வட இந்தியாவில் நேற்று ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியிருந்தது.
கொல்கத்தாவின் பார்க் சர்க்கஸ் செவன் பாயிண்ட் பகுதியில் ராம நவமி ஊர்வலம் தாக்கப்பட்டதாக பாஜக எம்பி சுகந்தா மஜும்தார் நேற்று கூறியிருந்தார்.
அவரது எக்ஸ் பதிவில், "காவி கொடிகளை ஏந்தியதற்காக வாகனங்கள் மீது கற்கள் மழை பொழிந்தன. கண்ணாடித் திரைகள் உடைந்தன. குழப்பம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இது தற்செயலானதல்ல - இது குறிவைக்கப்பட்ட வன்முறை. முதுகெலும்பு இல்லாத காவல்துறை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.
மம்தா பானர்ஜியால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதே படை அவரது திருப்திப்படுத்தும் அரசியலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அப்பாவி இந்துக்களைப் பாதுகாக்க ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை" என்று கொந்தளித்திருந்தார். இதுதொடராக வீடியோ ஒன்றரையும் அவர் பகிர்ந்தார்.
ஆனால் அந்த பகுதியில் ஊர்வலம் எதுவும் நடைபெறவில்லை எனவும் அங்கு எந்த ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கொல்கத்தா போலீஸ் தெளிவுபடுத்தி உள்ளது.
இதுதொடர்பாக கொல்கத்தா காவல்துறை அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், "பார்க் சர்க்கஸில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, எந்தவொரு ஊர்வலத்திற்கும் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. அந்தப் பகுதியில் அத்தகைய ஊர்வலம் எதுவும் நடக்கவில்லை.
ஒரு வாகனம் சேதமடைந்ததாக தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக தலையிட்டு ஒழுங்கை மீட்டெடுத்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எந்த வதந்திகளுக்கும் செவிசாய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கேட்டுக்கொண்டுள்ளது.