இந்தியா (National)

சொத்து குவிப்பு வழக்கு: பா.வளர்மதியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளிவைப்பு

Published On 2024-01-13 04:23 GMT   |   Update On 2024-01-13 04:23 GMT
  • சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
  • பா.வளர்மதியின் தரப்பு வாதங்களை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

புதுடெல்லி:

2001-2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு, 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் டிசம்பர் 4-ந்தேதி வாதங்களை தொடங்க வேண்டுமென அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வளர்மதி தரப்பிற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த நவம்பர் 6-ந்தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியின் மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு கடந்த டிசம்பர் 1-ந் தேதி விசாரித்தது. பா.வளர்மதியின் தரப்பு வாதங்களை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.

இருப்பினும் விசாரணைக்கு பட்டியலிடவில்லை. இதையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் தனது விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி சார்பில் முன்வைக்கப்பட்ட முறையீட்டை ஏற்ற சுப்ரீ்ம் கோர்ட்டு, ஜனவரி இறுதி வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News