அசாம் மாநிலத்தில் மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, உப்பு வழங்கும் திட்டம்
- 33 ஆயிரம் நியாய விலைக்கடைகளில் இந்த திட்டம் தொடங்கியது.
- 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர்.
மானிய விலையில் பருப்பு, சர்க்கரை, உப்பு வழங்கும் திட்டத்தை அசாம் மாநில அரசு இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் "மைசூர் பருப்பு ஒரு கிலோ 68 ரூபாய், சர்க்கரை ஒரு கிலோ 38 ரூபாய், உப்பு ஒரு கிலோ 10 ரூபாய். இது சாத்தியமா? ஆம். அசாமில் இது சாத்தியம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்த விலை ஜனவரி மாதத்தில் இருந்து மேலும் குறையும் எனக் குறிப்பிட்டுள்ளார். அந்தியோதயா என்பது எங்களுடைய இலக்கு. நோக்கம். ரேசன் கார்டு வைத்திருப்பவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக நாங்கள் புதிய அளவு கோலை உருவாக்கியுள்ளோம். 100 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு, சர்க்கரை, உப்பு கிடைக்கும். இவைகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
33 ஆயிரம் நியாய விலைக்கடையில் இந்த திட்டம் தொடங்கியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் இந்த தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 2.45 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைவர் என அரசு தெரிவித்துள்ளது.
நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 69-க்கும், சர்க்கரை ரூபாய் 38-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் வாங்கிக் கொள்ள முடியும். ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு கிலோ மைசூர் பருப்பு ரூபாய் 60-க்கும், சர்க்கரை ரூபாய் 30-க்கும், உப்பு ரூபாய் 10-க்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.