இந்தியா

ஊழல் வழக்கில் ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது

Published On 2023-09-09 06:49 IST   |   Update On 2023-09-09 14:19:00 IST
  • தாக்கப்படுவேன் அல்லது கைது செய்யப்படுவேன் என முன்னதாக தெரிவித்திருந்தார்
  • திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.

இந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு சட்ட விரோதமாக தனியார் நிறுவனம் மூலம் ரூ.371 கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஆந்திர மாநில சி.ஐ.டி. மற்றும் அமலாக்கத்துறை கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வருமானவரி துறையினர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். சந்திரபாபு நாயுடு மீது குற்றச்சதி, நேர்மையற்ற முறையில் சொத்து வழங்குதல், ஏமாற்றுதல், ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு நந்தியாலாவில் உள்ள திருமண மண்டப வளாகத்தில் கேரவனின் ஓய்வெடுத்தார்.

அதிகாலை 3 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சி.ஐ.டி. டி.எஸ்.பி. தனஞ்செயலு தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அவரை கைது செய்ய வந்துள்ளதாக பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு பாதுகாப்பு படை போலீசாரிடம் தெரிவித்தனர்.

சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் தற்போது சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய முடியாது என தடுத்து நிறுத்தினர் . அப்போது அங்கு வந்த சந்திரபாபு நாயுடுவின் வக்கீல்கள் அவரை கைது செய்வதற்கான முதல் தகவல் அறிக்கையை சி.ஐ.டி. போலீசாரிடம் கேட்டனர்.

அதற்கு சிஐடி போலீசார் கைது செய்த பிறகு முதல் தகவல் அறிக்கை மற்றும் அவரை கைது செய்வதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படும் என்றனர்.

இதனால் சி.ஐ.டி. போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கேரவனில் இருந்த வெளியே வந்த சந்திரபாபு நாயுடு தன் மீது போடப்பட்டுள்ள வழக்கு விபரம் எப்.ஐ.ஆரில் பெயரில்லாமல் எப்படி கைது செய்ய வந்தீர்கள் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். இதுபற்றி தகவல் அறிந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரம் காத்திருந்த சிஐடி போலீசார் அதிகாலை 6 மணிக்கு சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். அவர் விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ பரிசோதனை சோதனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News