சொற்கள் அல்ல, செயல்தான் முக்கியம்: எம்.பி.யின் தவறான உச்சரிப்பை கிண்டல் செய்ததற்கு கேரள மந்திரி பதில்
- கர்நாடகாவில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன.
- இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரள மாநில எம்.பி. பெங்களூரு சென்று பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.
கர்நாடக மாநில அரசு பெங்களூருவில் ஆக்கிரமிப்புக்காரர்களால் கட்டப்பட்ட குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்தியது. குடிசை அமைத்தவர்கள் அனைவரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடக மாநில நடவடிக்கைக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். கர்நாடக மாநில அரசு அதற்கு பதில் அளித்திருந்தது.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. ஏ.ஏ. ரஹிம் பெங்களூரு சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்திக்கும்போது, ஆங்கிலத்தில் உரையாடினார். அப்போது, ஆங்கில இலக்கணம் தவறாக உச்சரித்ததாக கேலி கிண்டல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், எம்.பி.யை கிண்டல் செய்ததற்கு, கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி பதில் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக சிவன்குட்டி கூறுகையில் "பேட்டியின்போது எம்.பி. பயன்படுத்திய ஆங்கில இலக்கணத்தை விமர்சனம் செய்தவர்கள் ஒரு விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதியின் திறமை, அலங்கார வார்த்தைகளால் மதிப்பிடுவதில்லை. அவரின் செயலால் மதிப்பிடப்படும். ரஹிம் தலையிடுவது பொறுப்பான அரசியல் தலையீடு ஆகும்" என்றார்.