இந்தியா

என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் பாண்டவர்கள் போல, ஆனால் மகாகட்பந்தன் கூட்டணி...: அமித்ஷா

Published On 2025-11-01 15:51 IST   |   Update On 2025-11-01 15:51:00 IST
  • பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
  • தேசிய கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பாட்னா:

பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி தேசிய கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பீகாரின் சமஸ்திப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நவம்பர் 6-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் இங்கு நடைபெறும். நவம்பர் 6-ம் தேதி பீகாரின் ஆட்சி யாருடைய கைகளில் இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

15 ஆண்டுகளாக காட்டு ராஜ்ஜியத்தைப் பரப்பிய கைகளிலோ அல்லது 20 ஆண்டுகளாக நல்லாட்சியைக் கொண்டு வந்த தேசிய ஜனநாயக கூட்டணி கைகளிலா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் பாபுவும், 11 ஆண்டுகளாக பிரதமர் மோடியும் நிதிஷ் பாபுவும் இணைந்து பீகாரின் வளர்ச்சிக்கான எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 5 கட்சிகளும் 5 பாண்டவர்கள் போல, ஒன்றாக தேர்தல் களத்தில் இறங்கிவிட்டன.

நமக்கு முன்னால் மகாகட்பந்தன் கூட்டணி உள்ளது. அது எங்களுக்கு எதிராக போட்டியிடுவதற்குப் பதிலாக, தங்களுக்குள் போட்டியிடும் அளவுக்கு குழப்பத்தையும் உள்கட்சிப் பூசலையும் கொண்டுள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News