இந்தியா

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு: டாடா குழுமம் அறிவிப்பு

Published On 2025-06-12 19:46 IST   |   Update On 2025-06-12 19:57:00 IST
  • பயணம் செய்த 242 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது.
  • தற்போது ஒருவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது.

இந்த நிலையில் 11ஏ இருக்கையில் பயணம் செய்த ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற பயணி, கீழே குதித்து உயிர் தப்பியதாக தற்போது செய்து வெளியாகியுள்ளது. கண் மற்றும் கைகளில் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஏற்பதாகவும், அவர்களுக்கு தேவையான உதவியை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சேதம் அடைந்த பி.ஜே. மருத்துவ விடுதிக்கும் முழு உதவி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பயணித்த பயணிகளைத் தவிர, குடியிருப்பு மற்றும் விடுதியில் இருந்தவர்களும் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News