இந்தியா

விமான விபத்தில் பலியான கேரள நர்சின் மகளை தேற்ற முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்

Published On 2025-06-13 12:53 IST   |   Update On 2025-06-13 12:53:00 IST
  • விமான விபத்தில் பலியான ரஞ்சிதாவுக்கு இந்து சூதன்(15) என்ற மகனும், இதிகா(12) என்ற மகளும் உள்ளனர்.
  • சிறுமியை தேற்ற முடியாமல் அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்த ரஞ்சிதா நாயர்(வயது39). 9 ஆண்டுகள் ஓமனில் நர்சாக பணியாற்றிய இவர், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு லண்டனுக்கு சென்றார்.

அங்கும் நர்சாக வேலை பார்த்து வந்த ரஞ்சிதா நாயருக்கு, கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நர்சு வேலை கிடைத்தது. அவரது சொந்த ஊரான கோழஞ்சேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலேயே அவருக்கு வேலை கிடைத்திருக்கிறது.

அந்த வேலையில் சேருவதற்காக, லண்டனில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்ய ரஞ்சிதா நாயர் முடிவு செய்தார். இதற்காக அவர் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தார். அப்போது தான் விமான விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்.

விமான விபத்தில் பலியான ரஞ்சிதாவுக்கு இந்து சூதன்(15) என்ற மகனும், இதிகா(12) என்ற மகளும் உள்ளனர். மகன் 10-ம் வகுப்பும், மகள் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பாட்டி துளசியுடன் இருந்து வருகின்றனர்.

ரஞ்சிதா சென்ற விமானம் விபத்தில் சிக்கிய தகவலை அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த விபத்தில் அவர் உயிர் தப்பியிருப்பார் என்றே நினைத்தனர். இந்த நிலையில் விமான விபத்தில் ரஞ்சிதா பலியாகிவிட்ட தகவல் பத்தினம்திட்டா கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

அதனைக்கேட்டு ரஞ்சிதாவின் தாய் துளசி மற்றும் குழந்தைகள் உடைந்து போனார்கர். சில நாட்களுக்கு முன்பு தங்களுடன் இருந்த அவர், பலியாகிவிட்டதை நினைத்து கதறினர். நேற்று வரை தன்னை கொஞ்சிய தாய் இறந்துவிட்டதை நினைத்து, ரஞ்சிதாவின் மகள் இதிகா மிகுவும் வேதனையடைந்தார்.

அவர் தனது பாட்டியை கட்டிப்பிடித்து அழுதபடியே இருந்தார். சிறுமியை தேற்ற முடியாமல் அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் தவித்து வருகின்றனர். பாட்டியை கட்டிப்பிடிதத்து சிறுமி கதறி அழுதது, ஆறுதல் கூறச்சென்ற அக்கம்பக்கத்து வீட்டினரை கண் கலங்க செய்தது.

ரஞ்சிதா அனைவரிடமும் அன்பாக பழகி வந்துள்ளார். அதிலும் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களுடன் மிகவும் நட்பாக இருந்துள்ளார். இதனால் அவரது மறைவு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

Tags:    

Similar News