அகமதாபாத் விமான விபத்து: கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படவில்லை - மத்திய அமைச்சர் விளக்கம்
- ஏர் இந்தியா விமானம் (AI171) ஜூன் 12 ஆம் தேதி புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.
- AAIB விசாரணையை மேற்கொண்டு முழு செயல்முறையையும் ஆராயும் என்று கூறினார்.
அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் (AI171) ஜூன் 12 ஆம் தேதி புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதில் 270 பேர் உயிரிழந்தனர்.
மறுநாள், சம்பவ இடத்தில் விமானத்தின் கருப்புப் பெட்டியை அதிகாரிகள் மீட்டனர். கருப்புப் பெட்டி அமெரிக்காவிற்கு பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இருப்பினும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு செவ்வாயன்று இந்த ஊகங்களை நிராகரித்தார்.
"இவை அனைத்தும் ஊகங்கள். கருப்புப் பெட்டி இந்தியாவில் உள்ளது. இது தற்போது விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தால் (AAIB) விசாரிக்கப்படுகிறது" என்று ராம்மோகன் நாயுடு செய்தியாளர்களிடம் கூறினார்.
கருப்புப் பெட்டியிலிருந்து தகவல்கள் எப்போது மீட்டெடுக்கப்படும் என்று கேட்டபோது, AAIB விசாரணையை மேற்கொண்டு முழு செயல்முறையையும் ஆராயும் என்று கூறினார்.
விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை கண்டறிய கருப்புப் பெட்டி டிகோடிங் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.