இந்தியா

அக்னிபாத் வன்முறையை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு- உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Published On 2022-06-18 08:00 GMT   |   Update On 2022-06-18 10:20 GMT
  • போராட்டம் தொடர்பான நிலை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்
  • தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் அக்னிபாத் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்

புதுடெல்லி:

ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்ககும் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். ரெயில்களுக்கு தீ வைப்பு, ரெயில் நிலையங்கள் சூறை என பல்வேறு போராட்டங்களால் ரெயில் சேவைகள் முடங்கி போய் உள்ளன.

இந்நிலையில், வன்முறை போராட்டங்களை விசாரிப்தற்கு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டம் மற்றும், வன்முறையால் ரெயில்வே சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கும்படி, மத்திய அரசு, உத்தர பிரதேசம், தெலுங்கானா, பீகார், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருக்கிறார். 


அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம்

போராட்டம் தொடர்பான நிலை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

மேலும், அக்னிபாத் திட்டமானது, தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை ஆராய்வதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் விஷால் திவாரி தனது மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News