இந்தியா

கோட்டாவில் நீட் தேர்வு கோச்சிங் சென்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. ஆண்டின் 11 ஆவது உயிரிழப்பு

Published On 2025-04-22 17:07 IST   |   Update On 2025-04-22 17:11:00 IST
  • சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது.
  • தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில், நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மலிந்தது கோட்டா நகரம்.

நாடு முழுவதிலும் இருந்து பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். மருத்துவம், இன்ஜினீயரிங் என்ற கனவுகளுடன் பிள்ளைகளும் வீட்டையும், பெற்றோராயும் பிரிந்து விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

ஆனால் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதற்கு தீர்வாக விடுதி அறைகளில் உள்ள சீலிங் மின்விசிறிகளில் ஸ்ப்ரிங் பொருத்தி தற்கொலைகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முயன்றது. ஆனால் மாணவர்கள் தற்கொலை நின்றபாடில்லை.

இந்நிலையில் கோட்டாவில் உள்ள ஒரு பிரபல பயிற்சி மையத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு பயின்று வந்த பீகாரைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் இன்று அதிகாலை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அறையில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், மாணவர் தனது குடும்பத்தினரோ அல்லது நீட் தேர்வுக்காக படித்து வந்ததோ தனது முடிவுக்கு காரணம் அல்ல என்று எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பீகாரில் உள்ள சாப்ராவைச் சேர்ந்த அந்த மாணவர், சுமார் ஒரு வருடமாக இங்குள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் நீட்-யுஜி-க்குத் தயாராகி வருவதாகவும், லேண்ட்மார்க் சிட்டி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வசித்து வருவதாகவும் குன்ஹாடி காவல் நிலைய வட்ட ஆய்வாளர் அரவிந்த் பரத்வாஜ் தெரிவித்தார்.

மாணவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது சகோதரிக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பியுள்ளார். மாணவனின் சகோதரி விடுதி மேலாளரிடம் தகவல் தெரிவித்து அவர், அறையில் சென்று பார்த்தபோது மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். சீலிங் மின்விசிறியில் தற்கொலையைத் தடுக்கும் விதமாக ஸ்ப்ரிங் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் மாணவர் சீலிங் காற்றாடியின் மேல் உள்ள கம்பியில் தூக்கிட்டுள்ளார்.

தனது புகைப்படம், மற்றும் விவரங்களை ஊடகத்தில் வெளியிடக்கூடாது என அவர் தனது தற்கொலை கடிதத்தில் எழுதியுள்ளார்.

மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு கோட்டாவில் பயிற்சி மைய மாணவர் தற்கொலை செய்து கொண்ட 11வது சம்பவம் இதுவாகும். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 17 ஆக இருந்தது. 

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

Tags:    

Similar News