இந்தியா

தெலுங்கானாவில் பிறக்கிறது புதிய கட்சி.. கே.சி.ஆர்-இன் மகள் கவிதா அறிவிப்பு

Published On 2026-01-06 02:52 IST   |   Update On 2026-01-06 02:53:00 IST
  • கட்சிக்குள் தனது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
  • தந்தையை சுற்றி தீயசக்திகள் இருப்பதாக கவிதா கூறியிருந்தார்.

தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான கவிதா அக்கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கேசிஆரின் மகனான கே.டி. ராமராவ் கட்சியில் அதிக அதிகாரத்துடன் வலம் வந்ததும், மகள் கவிதா ஓரங்கட்டப்பட்டதும் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தது.

கவிதா, அண்ணன் ராமராவை மறைமுகமாக பலமுறை விமர்சித்து வந்தார். தந்தையை சுற்றி தீயசக்திகள் இருப்பதாக கவிதா கூறியிருந்தார்.

கவிதாவின் நடவடிக்கைகளுக்காக கேசிஆர் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருந்தார். அதற்கு அடுத்தநாளே கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்தார்.

இந்நிலையில் புதிய அரசியல் கட்சியை தொடங்கும் முடிவை கவிதா அறிவித்துள்ளார்.

நேற்று தெலுங்கானா சட்ட மேலவையில் கவிதா பேசும்போது, "சுயமரியாதைக்காகவே எனது தந்தையின் கட்சியை விட்டு வெளியேறினேன்" என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.

தனது பங்களிப்புகள் இருந்தபோதிலும், கட்சிக்குள் தனது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் தனது முடிவுக்கு காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் சொத்து தகராறு காரணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தெலுங்கானா பெண்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து உழைக்கப்போவதாகவும் அவர் கூறினார்.   

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, ''நாங்கள் மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கப் போகிறோம். ஜனநாயக ரீதியாக களத்தில் பணியாற்ற விரும்பும் மக்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கும்.

எங்களின் கட்சி என்றும் தெலுங்கானா மக்களின் கட்சி என்றும் நாங்கள் நினைத்த பிஆர்எஸ், பல விஷயங்களில் எங்களை கைவிட்டுவிட்டது. எங்கள் லட்சியங்களை அது நிறைவேற்றவில்லை. புதிய கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்'' என தெரிவித்தார்.

தெலுங்கானா ஜாக்ருதி என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் கவிதா, அந்த அமைப்பையே அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார். தெலுங்கானாவில் தற்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில் அங்கு 3 ஆண்டுகள் கழித்து சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 

Tags:    

Similar News