இந்தியா

1981 ஆண்டின் கொலை வழக்கு - 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

Published On 2023-06-02 03:33 GMT   |   Update On 2023-06-02 05:13 GMT
  • 1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
  • நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

90 வயது முதியவருக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 1981-ம் ஆண்டு பத்து பேரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுதவிர குற்றவாளிக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. 42 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொலை சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முதற்கட்டமாக மெயின்பூரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு ஃபிரோசாபாத் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஃபிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

பத்து பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், சிறை தண்டனை மேலும் 13 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

Similar News