பெங்களூருவில் டெங்கு காய்ச்சலால் 4 ஆயிரம் பேர் பாதிப்பு- முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல் மந்திரி சித்தராமையா உத்தரவு
- கடந்த சில நாட்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் டெங்கு கண்காணிப்பு தொழில்நுட்ப இணைய பக்கத்தை அறிமுகம் செய்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சுகாதாரதுறை சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
டெங்கு பாதித்தவர்கள் பலர் ரத்த தட்டுகள் குறைந்து காணப்படுகின்றனர். எனவே இவர்களுக்கு ரத்த தட்டுக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பல ரத்த வங்கிகள் ரத்த தான முகாம்கள் நடத்தி வருகின்றது.
இதற்கிடையே டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து பெங்களூரு நகர எல்லைக்குள் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துவது, தண்ணீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை சரிசெய்வது, தூய்மையை பராமரிப்பது போன்ற பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்களின் வீடுகளை சுற்றிலும் தூய்மையை பராமரிக்க வேண்டும். டெங்கு கொசுக்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கண்டு பயப்பட தேவை இல்லை. ஆனால் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் டெங்கு கண்காணிப்பு தொழில்நுட்ப இணைய பக்கத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்த மென்பொருள், சுகாதாரத்துறை, பெங்களூரு மாநகராட்சி மற்றும் இந்திய அறிவியல் கழகத்தில் உள்ள ரோபோடிக் தொழில்நுட்ப பார்க் மையம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான இது, டெங்கு காய்ச்சல் பரவலை 4 வாரங்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கும். கர்நாடகம் முழுவதும் எந்தெந்த மாவட்டங்களில் இது பரவும் என்பது குறித்த தகவலையும் வழங்கும். வரும் காலத்தில் இந்த தொழில்நுட்பம் பிற நோய்களை கண்டறியவும் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.