ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் பலி எதிரொலி: கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய மசோதா கொண்டு வரும் கர்நாடகா..!
- ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு.
- கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தால் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை.
கர்நாடகாவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்ட விழாவின்போது சின்னசாமி கிரிக்கெட் மைதானம் நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சித்தராமையா அரசு மீது கடும் விமர்சனம் எழுப்பப்பட்டது. ஆர்சிபி அணி நிர்வாக அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் அடங்கிய மசோதா கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.
ஒரு நிகழ்ச்சி நடைபெறும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த தவறினால், நிகழ்ச்சிக்கு திட்டமிட்டவர், நிகழ்ச்சியை செயல்படுத்தியவர்கள் அதற்கு பொறுப்பானவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு 3 வருடம் வரை சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத குற்றமாக கருதப்படும் வகையில் மசோதா கொண்டு வரப்பட இருக்கிறது.
மழைக்கால கூட்டத் தொடரின்போது இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.