இந்தியா
விமானம்

எரிபொருள் விலை 5.3 சதவீதம் அதிகரிப்பு- விமான கட்டணம் உயருகிறது

Published On 2022-05-17 06:22 GMT   |   Update On 2022-05-17 06:22 GMT
எரிபொருள் விலை அதிக அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விமான கட்டணமும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் விமான எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலும், 16ந்தேதியிலும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக எரிபொருள் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதால் சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியையே நம்பி உள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவை கடந்த மார்ச் மாதம் 22ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 6ந்தேதி வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பிறகு விலையில் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.

அதேநேரத்தில் விமான எரிபொருள் விலை கடந்த மார்ச் மாதம் 16ந்தேதி கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் அதாவது ரூ.17,135.63 உயர்த்தப்பட்டது. ஏப்ரல் 1ந்தேதி 2 சதவீதமும், 16ந்தேதி 0.2 சதவீதமும், மே 1ந்தேதி 3.2 சதவீதமும் உயர்த்தப்பட்டது. நேற்று 5.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் ரூ.6,188.25 உயர்ந்து ரூ.1,23,039.71க்கு விற்பனையானது. மும்பையில் ரூ.1,21,847.11க்கும், கொல்கத்தாவில் ரூ.1,27,854.60க்கும், சென்னையில் ரூ.1,27, 286.13க்கும் விற்கப்படுகிறது. உள்ளூர் வரி மாறுபடுவதன் காரணமாக இதன் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டுள்ளது.

விமான எரிபொருள் விலை கடந்த மார்ச் மாதம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவில் 5.3 சதவீதம் உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் தொடர்ந்து 10வது முறையாக விமான எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. எரிபொருள் விலை அதிக அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விமான கட்டணமும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Tags:    

Similar News