இந்தியா
திருப்பதியில் நடந்த கருத்தரங்கில் அமைச்சர் ரோஜா கலந்துகொண்டு பேசிய காட்சி

திருப்பதியில் அமைச்சர் ரோஜா செல்போன் திருட்டு

Published On 2022-04-22 11:25 IST   |   Update On 2022-04-22 11:25:00 IST
அமைச்சர் ரோஜாவின் செல்போன் காணாமல் போன சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி:

ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற நடிகை ரோஜா நேற்று திருப்பதிக்கு வந்தார். வரும் 21-ந்தேதி திருப்பதியில் உள்ள எஸ்.வி. பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதுகுறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பதி வந்த அமைச்சர் ரோஜா பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

எஸ்.வி. பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்காக சென்றார். அவருக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். பின்னர் அங்குள்ள அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த அமைச்சர் ரோஜா இதன்பின்னர் ஆலோசனை கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கிற்கு சென்றார்.

கூட்ட அரங்கிற்கு சென்றபோது அவரது செல்போன் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அமைச்சர் ரோஜா ஏற்கனவே அடுத்த அறையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் எஸ்.வி. பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்யும் நபர் மேஜையில் இருந்த செல்போனை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து அந்த தற்காலிக ஊழியரிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து திருப்பதி போலீஸ் சூப்பிரண்ட் பரமேஸ்வரி ரெட்டி கூறுகையில்:-

அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருடு போகவில்லை. கவனக்குறைவாக மேசையில் செல்போனை வைத்து விட்டு அமைச்சர் ரோஜா கூட்ட அரங்கிற்கு சென்றார். கேட்பாரற்று விழுந்த செல்போனை தற்காலிக ஊழியர் எடுத்து வைத்துக்கொண்டார்.

தற்காலிக ஊழியருக்கு மேசையிலிருந்து அமைச்சர் ரோஜாவின் செல்போன் என தெரியாது. காணாமல் போன செல்போனை தற்போது அமைச்சர் ரோஜாவிடம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அமைச்சர் ரோஜாவின் செல்போன் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News