இந்தியா
மாயாவதி

ஜனாதிபதி தேர்தலில் போட்டியா?: மாயாவதி பதில்

Published On 2022-03-28 02:51 GMT   |   Update On 2022-03-28 02:51 GMT
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நியமிக்கப்படுவார் என அங்கு தகவல்கள் பரவின.
லக்னோ :

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நியமிக்கப்படுவார் என அங்கு தகவல்கள் பரவின. ஆனால், இந்த வாய்ப்பை ஏற்கபோவதில்லை என மாயாவதி அறிவித்து உள்ளார்.

இது குறித்து லக்னோவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

‘நமது கட்சியின் எதிர்காலம் முடிவுக்கு வரும் என்று தெரிந்தும், அந்த பதவியை (ஜனாதிபதி) நான் எப்படி ஏற்க முடியும்? எனவே பகுஜன் சமாஜ் கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிக்கும் நான் தெளிவுபடுத்துவது என்னவென்றால், நமது கட்சியின் நலன் கருதி ஜனாதிபதி பதவிக்கான வாய்ப்பை பா.ஜனதாவோ அல்லது வேறு எந்த கட்சியும் வழங்கினாலும் நான் அதை ஏற்கமாட்டேன் என தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறினார்.

சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைக்காவிட்டால், ‘பெஹன்ஜி'யை (மாயாவதி) ஜனாதிபதியாக்குவோம் எனவும், இதற்காக பா.ஜனதாவை ஆட்சிக்கு வர அனுமதிக்குமாறும் பா.ஜனதா தனது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மூலம் மக்களிடையே பொய்ப் பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டிய மாயாவதி, தனது தலைவரான கன்ஷிராமே ஜனாதிபதி பதவியை மறுத்து விட்டதாகவும், அவரது தீவிர தொண்டரான தான் மட்டும் எப்படி இந்த பதவியை ஏற்க முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.
Tags:    

Similar News