இந்தியா
கவுகாத்தி விமான நிலையத்தில் 80 வயது பெண்ணின் ஆடையை களைந்து சோதனை

கவுகாத்தி விமான நிலையத்தில் 80 வயது பெண்ணின் ஆடையை களைந்து சோதனை - விசாரணை நடத்த உத்தரவு

Published On 2022-03-25 05:53 GMT   |   Update On 2022-03-25 07:33 GMT
கவுகாத்தி விமான நிலையத்தில் பெண்ணின் ஆடையை களைந்து சோதனை நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கவுகாத்தி:

நாகாலாந்தை சேர்ந்தவர் மொகலோ கிகோன் (வயது80). மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று தனது பேத்தியுடன் டெல்லி செல்வதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்திற்கு சென்றார்.

அவர் வீல் சேரில் அமர்ந்து சென்றார்.அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.இந்த சோதனையின் போது மொகலோ கிகோன் இடுப்பு பகுதியில் இருந்து ஒரு விதமான சத்தம் எழந்தது.

கடந்த மாதம் அவர் இடுப்பில் அறுவை சிசிச்சை செய்து பிளேட் வைத்து இருந்தார்.இதனால் சத்தம் வந்ததாக தெரிகிறது.

இதனால் பாதுகாப்பு படையினர் அவர் இடுப்பு பகுதியில் ஏதாவது மறைத்து வைத்து கடத்தி செல்லலாம் என சந்தேகம் அடைந்தனர். உடனே பாதுபாப்பு படையை சேர்ந்த பெண் ஒருவர் அவரை சோதனை செய்ய முயன்றார். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தான் ஆபரே‌ஷன் செய்தது குறித்து விளக்கி கூறினார்.



ஆனாலும் அதை அவர் கேட்காமல் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் ஆடையை களைந்து சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக அவரது மகள் டோலி கிகோன் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். மேலும் டுவிட்டரிலும் இதனை பதிவு செய்தார். இது பற்றி அறிந்த மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியா சம்பவம் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து சோதனை நடத்திய விமான நிலைய பாதுகாப்பு படையை சேர்ந்த பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் அவர் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தால் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News