இந்தியா
வெங்கையா நாயுடு

மக்கள் பிரதிநிதிகள் பொது வாழ்க்கையில் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

Published On 2022-03-05 07:53 IST   |   Update On 2022-03-05 07:53:00 IST
மக்கள் தீர்ப்பை மதிக்கக்கூடிய பொறுமை வேண்டும். இதை எல்லா அரசியல் கட்சிகளும் மனதில் கொள்ள வேண்டும். வன்முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பனாஜி :

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கோவா மாநில தலைநகர் பனாஜிக்கு சென்றுள்ளார். அங்குள்ள கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

அனைத்து மக்களும், குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், தார்மீகத்தையும், நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.

நாடாளுமன்றம், சட்டசபைகளில் அமளி நடப்பது, சட்டசபையில் கவர்னர் உரையின்போது குறுக்கிடுவது, சபைகளில் வன்முறை சம்பவங்கள் நடப்பது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய சம்பவங்கள், ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி விடும். அத்துடன் மக்களும் அதிருப்தி அடைவார்கள்.

கவர்னர் என்பவர் அரசியல் சட்ட பதவி வகிப்பவர். சட்டசபை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு. பாராளுமன்றம், சட்டம் இயற்றும் உயரிய அமைப்பு. எல்லா அமைப்புகளையும் மதிக்க வேண்டும்.

கவர்னர் உரை பிடிக்காவிட்டால், அதை பிறகு விமர்சியுங்கள். பட்ஜெட் பிடிக்காவிட்டாலும் விமர்சியுங்கள். ஆனால், அரசாங்கத்தை பிடிக்காவிட்டால், பொறுமை காக்க வேண்டும். அமைதியாக போராட வேண்டும். உங்கள் வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும்.

மக்கள் தீர்ப்பை மதிக்கக்கூடிய பொறுமை வேண்டும். இதை எல்லா அரசியல் கட்சிகளும் மனதில் கொள்ள வேண்டும். வன்முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News