மண்டல பூஜை சீசன்: சபரிமலைக்கு 30.56 லட்சம் பக்தர்கள் வருகை: 332 கோடி ரூபாய் வருமானம்
- உண்டியல் காணிக்கை மூலம் 83.17 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
- கடந்த வருடம் 41 நாட்களில் 297.06 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை சீசனில் 30.56 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாகவும், 332.77 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உண்டியல் காணிக்கை, அப்பம் மற்றும் அரவணை ஆகிய புனித பிரசாதங்கள், ரூம் வாடகை, ஏலம் உள்ளிட்டவைகள் மூலம் இந்த வருவாய் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
உண்டியல் காணிக்கை மூலம் 83.17 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த வருடத்தை விட இது குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகமாகும். கடந்த வருடம் 41 நாட்களில் 297.06 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. உண்டியல் காணிக்கை 80.25 கோடியாக இருந்தது.
இன்று மதியம் வரை 30,56,871 பக்தர்கள் வருகை தந்துள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் 37,521 பேர் வந்துள்ளனர். மண்டல பூஜையான இன்று மதியம் 1 மணி வரை 17,818 பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
கடந்த வருடம் மண்டல பூஜை வரை 32,49,756 பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
நேற்று சுவாமி ஐயப்பனுக்கு புனிதமான தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. சபரிமலையின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை இன்று நடைபெற்று, இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.